வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே நேற்றைய தினம் தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே நேற்றைய தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தமிழக கடலோரத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு முதல் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. சென்னை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டல பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட 24 சதவீதம் குறைவாக இருந்தது. வடகிழக்குப் பருவமழையின் இயல்பான மழை அளவு 44 செ.மீ.(440 மி.மீ.) ஆனால், கடந்த ஆண்டு 34 செ.மீ.(340 மி.மீ.) மழை பதிவானது. நிகழாண்டில் இயல்பான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 30 நிமிடங்கள் மழை செய்தது. பின்னர் நள்ளிரவில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.
தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.