This Article is From Dec 02, 2019

தொடர் கனமழை: வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்

தொடர் கனமழை: வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும் - ஸ்டாலின்

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து, கனமழை பெய்து வரும் நிலையில், வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதனால் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பதவில் அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.                                 

.