கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தமிழத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து, பெய்து வரும் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதற்கும் பொருந்ததாது. இது ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகனமழை பெய்யும் என்பதற்காக கூறப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக சென்னையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு ஈடாக பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.