This Article is From Dec 02, 2019

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், வேகமாக நிரம்பி வருகின்றது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது. 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதனால் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.

முன்னதாக, குமரிகடல் முதல் தென்கிழக்கு வங்கக்கடல் வரை நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது. இதனை தொடர்ந்து இன்று காலையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
 

.