இடுக்கி அணையின் நீர்மட்டம் 2399மீட்டரைத் தொட்டால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். (கோப்புப் படம்)
Thiruvananthapuram: கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் கனமழையைச் சந்தித்து வருகின்றன. வானிலை ஆய்வு மையம் இம்மழை புதன் வரை நீடிக்கும் எனக் கணித்துள்ளது.
இதனையடுத்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் 75 வயது முதியவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
இடுக்கி அணையின் நீர் மட்டம் உயர்வதையடுத்து அம்மாவட்டத்தின் அரசு அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். நீரின் அளவு 2395மீட்டரைத் தொட்டதையடுத்து அங்கு ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணையின் நீர்மட்டம் 2399மீட்டரைத் தொட்டால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும். கடைசியாக இவ்வாறு நடந்தது 1992இல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அனையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தாலும், மழையின் தீவிரம் முன்பிருந்த அளவில் 1/3 அளவாகக் குறைந்துள்ளது. அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை என அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட அதிகாரிகள் எத்தகைய சூழலையும் சமாளிக்கத் தயாராக விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆயிரம் போலிசார் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.