கேரள அரசாங்கம் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது, ஹெக்டே
New Delhi: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் நேற்று இரண்டு பெண்கள் உள்ளே சென்று தரிசனம் செய்தனர். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் போகலாம்' என்று தீர்ப்பளித்த பிறகு, நேற்றுதான் இள வயதுப் பெண்கள் ஆலயத்திற்குள் சென்றனர். இந்த செயலுக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரான ஆனந்த் குமார் ஹெக்டே, ‘சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் அணுகுமறையானது, இந்துக்களை பலாத்காரம் செய்வது போன்றுள்ளது' என்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதை அடுத்து, பல்வேறு வலதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரள தலைநகரமான திருவனந்தபுரத்தில் பெருந்திராளானோர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவே, போலீஸ் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தண்ணீர் பாய்ச்சியும் விரட்டியடித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் ஹெக்டே இந்த விவகாரம் குறித்து கூறுகையில், ‘கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன் முடிவு… இன்னும் சொல்லப் போனால் இடதுசாரி முன் முடிவுதான் தற்போது அங்கு நடந்து வரும் அனைத்துக் குழுப்பங்களுக்கும் காரணமாகும். உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில், சட்ட ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்னை. அதை சரிவர கையாள அவர்கள்தான் மக்களுக்கு ஏற்றாற் போல முடிவெடுக்க வேண்டும்.
கேரள அரசாங்கம் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது. இது இந்துக்களை பலாத்காரம் செய்வது போன்றது' என்று கூறினார்.
அமைச்சர் ஹெக்டே, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டு அவர், ‘பாஜக, இந்திய சட்ட சாசனத்தில் இருக்கும் ‘மதச்சார்பற்ற' என்ற வார்த்தையை நீக்கும்' என்று கூறினார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக-வுக்கு எதிராக தேசம் தழுவிய அளவுக்கு கண்டனப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், ‘பலாத்காரம்' என்ற சொல்லை சாதரணமாக பயன்படுத்தியுள்ளார் ஹெக்டே.