கென்ட் பகுதியில் புலி உலவி வருவதாக ஜூலியட்டின் பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம் சொன்னவுடன், அவருக்கு அனைத்தும் புரிந்தது.
இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் நிஜப் புலி என்று நினைத்து ஹெலிகாப்ட்டருடன் உள்ளூர் போலீஸ் ஆயுதங்களுடன் வந்த நிலையில், அது ஒரு ‘டம்மி' புலி என்பது தெரியவந்துள்ளது. கென்ட் பகுதியில் புலி ஒன்றைப் பார்த்ததாக போலீஸுக்குத் தகவல் வந்ததைத் தொடர்ந்து இந்த ‘தேடுதல் வேட்டை' அரங்கேறியுள்ளதாக பிபிசி தகவல் தெரிவிக்கிறது.
கென்ட் பகுதியில் வசிக்கும் ஜூலியட் சிம்சன் என்னும் 85 வயது மூதாட்டி, சிலைகள் வடிப்பவர். அப்படித்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மெஷ் மற்றும் ரெசின் கொண்டு, உயிருடன் இருக்கும் புலி போன்ற ஒரு சிலையை வடித்துள்ளார். கென்ட் பகுதியில் புலி உலவி வருவதாக ஜூலியட்டின் பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம் சொன்னவுடன், அவருக்கு அனைத்தும் புரிந்தது. கென்ட் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்த தன் சிலையை நோக்கி அவர் சென்றுள்ளார்.
அதே நேரத்தில் அங்கு ஹெலிகாப்ட்டர், ஆயுதங்களுடன் போலீஸும் வந்துள்ளது, “போலீஸ் என்னைப் பார்த்ததும் புலி இருப்பதாக வந்த தகவல் போலி என்பதை உணர்ந்தனர். அப்போது அவர்களிடம், ‘புலியிடம் அறிமுகம் செய்து வைக்கவா?' எனக் கேட்டேன்,” என்று பிபிசி-யிடம் கூறுகிறார்.
அவர் மேலும், “அந்த சிலை பார்ப்பதற்கு உண்மையான புலி அமர்ந்திருப்பதைப் போன்றே இருக்கிறது. நடக்கும் பாதையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அது அமைந்திருப்பதால், அது தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு உண்மையான புலி போன்றே இருக்கும்,” என்று விளக்குகிறார்.
இது குறித்து தகவலை ஜூலியட்டின் பேத்தி மார்த்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சில புகைப்படங்களுடன் அவர், “என் பாட்டி ஒரு சிலை வடிப்பவர். இன்று சுமார் 10 ஆயுதம் தாங்கிய போலீஸ் ஹெலிகாப்ட்டருடன் புலியைப் பிடிக்க வந்துள்ளது. இதுதான் அந்தப் புலி,” என்று கிண்டல் தொனியில் ட்வீட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்தான தகவலும் புகைப்படங்களும் ட்விட்டரில் பலரை விழிபிதுங்கி சிரிக்க வைத்துள்ளது.
கென்ட் போலீஸ், முழு வனப் பகுதியையும் சோதனையிட்டு, வன விலங்குகள் எதும் இல்லை என்பதை நிறுவியுள்ளனர்.
Click for more
trending news