கமாண்டர் டாமிக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது
New Delhi: ஆஸ்திரேலியாவுக்கு அருகே கடலில் மாட்டிக் கொண்ட இந்திய கடற்படை அதிகாரி, மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை முதல் அவர் கடலில் சிக்கித் தவித்தார். இந்நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
படகு போட்டி ஒன்றில் கலந்து கொண்ட கடற்படை அதிகாரி கமாண்டர் அபிலாஷ் டாமி, காயம் காரணமாக நடுக் கடலில் சிக்கிக் கொண்டார். அவர் உதவி எதிர்பார்த்து தனது படகில் காத்துக் கொண்டிருந்தார். அவரை மீட்க இந்திய அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்தது. இதையொட்டி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓசிரிஸ் கப்பல் அவர் இருக்கும் இடத்துக்கு அருகில் சென்றது. ஆனால், ஓசிரிஸ் கமாண்டர் டாமி இருக்கும் இடத்திற்கு செல்ல மோசமான வானிலை தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால், கமாண்டர் டாமியை மீட்பதற்கு முன்னர், சிறிய படகு மூலம் அவருக்கான முதலதவியை அனுப்பியது ஓசிரிஸ்.
கோல்டன் க்ளோப் போட்டி எனப்படும் படகுப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் கமாண்டர் டாமி. அப்போது தெற்கு இந்திய பெருங்கடலில் வீசிய புயல் காற்றால் அவரது படகு பாதிப்புக்கு உள்ளானது. கமாண்டர் டாமிக்கும் முதுகுப் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாமி, குறுஞ்செய்தி மூலம் தனது நிலைமை குறித்து தகவல் தெரிவித்தார்.
நேற்று இந்திய கடற்படையின் விமானமான பி-8, கமாண்டர் டாமி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தது. அவர் கன்னியாகுமரியிலிருந்து 5,020 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இந்திய கடற்படை சார்பில் ஒரு கப்பலும், ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் ஒரு கப்பலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலும் கமாண்டர் டாமியை பத்திரமாக மீட்க பணியில் ஈடுபட்டன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஓசிரிஸ் கப்பல் அவரை பத்திரமாக மீட்டுள்ளது.