Read in English
This Article is From Jul 26, 2018

‘ஓ.பி.எஸ், நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்’- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டெல்லிக்குச் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்க்க மறுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது

Advertisement
தெற்கு

Highlights

  • பன்னீர்செல்வத்தின் சகோதரர் சிகிச்சைக்காக உதவி செய்துள்ளார் அமைச்சர்
  • இது அதிகார துஷ்பிரயோகம், திமுக
  • எதையும் தாங்கும் இதயம் வேண்டும், டெல்லியிலிருந்து திரும்பிய ஓ.பி.எஸ்
CHENNAI:

டெல்லிக்குச் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்க்க மறுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘தமிழக துணை முதல்வர் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக எம்.பி மைத்ரேயன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிச் சென்றார் பன்னீர்செல்வம். 

இதையடுத்து அவர் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு மைத்ரேயனுடன் சென்றுள்ளார். அங்கு மைத்ரேயனை மட்டும் பார்க்க அனுமதித்துள்ளார் அமைச்சர். பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், ‘இது அரசியல் ரீதியான பயணம் அல்ல. என் சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்காக, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்’ என்று கூறினார். 

Advertisement

இதற்கு ராணுவ அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘மைத்ரேயன் எம்.பி-க்கு மட்டும் தான் அமைச்சரை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரை சந்திக்கவில்லை’ என்று பதிவிடப்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற கருத்தை மட்டும் சொல்லிவிட்டு புறப்பட்டார். நிர்மலா சீதாராமன், பன்னீர்செல்வத்தை பார்க்க மறுத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அதிமுக, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ஸ்டாலின், ‘ராணுவ ஹெலிகாப்ட்டர் கொடுத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதை வாங்கிப் பயன்படுத்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும். ஒரு ராணுவ ஹெலிகாப்டர் எப்படி தனிப்பட்ட நபர் ஒருவரின் பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதுவரை இது குறித்து வெளியே தெரியாத நிலையில், பன்னீர்செல்வம் மூலமாகவே தற்போது இந்த விஷயம் கசிந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

Advertisement