This Article is From Jun 12, 2019

இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றது. தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பு முடிந்து திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, தேர்தலுக்கு பின் நடைபெறுகிற வழக்கமான கூட்டம் தான் இது. அதிமுக எம்எல்ஏக்கள், எம்,பிக்கள்., மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது. இதில், கட்சிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசப்பட்டது.

ஒற்றைத் தலைமை குறித்து சிலர் கூறியதால், கூட்டப்பட்ட கூட்டம் என்று எதுவும் இல்லை. இதனால், கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விவாதித்தோம் இன்று அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். எந்தப் பிரச்சைனையும் இல்லை.

இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை. மத்திய அமைச்சரவையில் தமிழகம் இடம்பிடிப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்று அவர் கூறினார்.

இதேபோல், கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,

ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை. அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள்.

தேர்தல் முடிவு மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசினோம். எப்படி சிரித்தபடி உள்ளே சென்று கூட்டத்தில் பங்கேற்றோமோ, அப்படியே சிரித்தபடி வெளியே வந்தோம். ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என முடிவெடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

.