4 மாநிலங்களில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- ஹோலி கொண்டாட்டங்கள் களையிழந்தன
- கொரோனா பாதிப்பு காரணமாக எல்லை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை
- இரானில் இருந்து 58 இந்தியர்கள் மீட்பு
New Delhi: கொரோனா பீதி காரணமாக இந்தியா முழுவதும் நேற்றைய தினம் ஹோலி கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் புதிதாக 5 பேருக்கும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் மூன்று பேருக்கும், ராஜஸ்தானில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக வைரஸ் பாதிப்பு உள்ளதாக அறிவித்த 4 மாநிலங்களிலும் மீண்டும் பரிசோதனை நடைபெறுகிறது. அதிலும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62 ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகக் கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒருவரின் பயண தகவல்களை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் எனக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஷைலஜா கூறும்போது, மக்கள் தங்கள் பயண தகவல்களை மறைப்பானால் கொரோனா வைரஸ் மேலும் பரவுகிறது. இதனால், பொதுச் சுகாதாரத்துறை சட்டத்தின்படி, பயண தகவல்களை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் என்று கூறினார்.
கேரளாவில் புதிதாக 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 3 வயது சிறுவனின் பெற்றோர் ஆவார்கள். அண்மையில் இத்தாலியிலிருந்து திரும்பிய அந்த குடும்பத்தினர் தங்களது பயண தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர்.
இந்தியாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், கேரளாவைச் சேர்ந்தவர்கள் 8 பேர், கர்நாடகா, மகாராஷ்டிரா, புனே உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 பேர், ராஜஸ்தானில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் புதிதாக 8 பேர் பாதிக்கப்பட்டனர்.
பெரும் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், நேற்றைய தினம் ஹோலி கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் தங்கள் ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்ப்பதாக அறிவித்தனர். கொரோனா பரவுவதன் காரணமாக வல்லுநர்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 3 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச்.11ம் தேதி வரை வழங்கப்பட்ட அனைத்து விசாக்கள் மற்றும் இ-விசாக்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு மற்றும் கேரளாவில் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என்றும், கேரளாவில் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி, ஹரியானா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகார, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கேட்டறிந்துகொண்டார்.