ஹைலைட்ஸ்
- ₹1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் வழக்கு
- இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவு
- நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை
சமீபத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை மாரிதாஸ் யூடியூபில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய விமர்சனங்களின் அடிப்படையில் தங்களது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மீது நடவடிக்கையை எடுப்போம் என தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும் மாரிதாஸ் யூடியூபில் தெரிவித்திருந்தார். ஆனால், இம்மாதிரியான எவ்விதமான மின்னஞ்சலையும் தங்களது நிறுவனம் அனுப்பவில்லையென நியூஸ் 18 தமிழ்நாடு மறுத்திருந்தது. இந்த போலி மின்னஞ்சல் குறித்து காவல்நிலையத்தில் புகாரையும் செய்தி நிறுவனம் கொடுத்திருந்தது.
மேலும், நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்த நிலையில், ₹1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார்.