வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதி வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து, துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பரப்புரை நிறைவடைந்த ஒரு மணி நேரத்தில் அந்த அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கும், தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வருமான வரித்துறை அளித்த தவறான அறிக்கையின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வேலூரில் திட்டமிட்டபடி மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், தவறிழக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. தேர்தல் ரத்து காரணமாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் அந்த மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.