தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக ஜனவரி 22-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 18 பேர் கவர்னரிடம் கடிதம் அளித்தனர். இதுதொடர்பாக அதிமுக கொறடா அளித்த புகாரின் பேரில் டிடிவி அணி எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சபாநாயர் எடுத்த முடிவை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.
இந்த சம்பவங்கள் நடைபெற்று 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட 18 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல் இருக்கிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 22-ம்தேதிக்குள் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.