This Article is From Jan 25, 2019

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

சென்னை உயர் நீதிமன்றம், ‘முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடு வந்துள்ளது?’ என்று கேட்டுள்ளது. 

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடங்கி வைத்தார்.

ஹைலைட்ஸ்

  • மாநாட்டின் முதல்நாளில் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
  • இறுதி நாளன்று வெங்கையா நாயுடு பங்கேற்றார்
  • ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுக்கான ஒப்பந்தம், முதல்வர் தகவல்

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்று சென்னையில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றமும், ‘முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடு வந்துள்ளது?' என்று கேட்டுள்ளது. 

சென்னையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்ய புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெற்றுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிறைவு நாள் விழாவான இன்று, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். 

அரசு தரப்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில், முதல் முதலீட்டாளர் மாநாடு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிமன்றம், ‘முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.  2015-ல் நடந்த முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன.  2015-ல் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன.  2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை' என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

.