தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் அரசு சார்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எம்.ஜி.ஆரின் நினைவாக மெரினாவில் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக மெரினா சாலையில் அமைந்திருக்கும் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் ரூ. 2.52 கோடி செலவில் வளைவை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டிருப்பதாக கூறி, சாலையை தவிர்த்து மற்ற எந்த கட்டுமானங்களையும் செய்ய அனுமதிக்க கூடாது என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன், சேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் எம்.ஜி.ஆர். வளைவை திறக்க நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.