யானைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Jhargram: மேற்கு வங்கத்தில் உயர் மின்னழுத்தம் தாக்கியதில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஜர்க்ராம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பின்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சத்பாகி பகுதியில் 20 யானைகள் கொண்ட கூட்டம் சென்று கொண்டிருந்தது. அப்போது 3 யானைகள் மின் வயர்களை உரசியதில் உயர் மின்னழுத்தம் யானைகள் மீது பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே யானைகள் உயிரிழந்தன. இதனைப் பார்த்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் வந்த வனத்துறை அதிகாரிகள் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதை தவிர்ப்பதற்கு மேற்கு வங்கத்தில் வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஜல்பைகுரி மாவட்டத்தில் சென்சார் மூலம் எச்சரிக்கை செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன்படி 150 - 200 மீட்டர் தூரத்தில் யானைகள் வரும்போது சிக்னல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் விபத்துகள் குறைக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.