This Article is From Feb 13, 2019

என்னவாகும் சின்னத்தம்பியின் நிலைமை..?- உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்!

உடுமலை காட்டுப் பகுதியில் சுற்றிவரும் சின்னத்தம்பி யானையை என்ன செய்வது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

என்னவாகும் சின்னத்தம்பியின் நிலைமை..?- உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்!

தமிழக அரசு இன்று வாதாடுகையில், ‘விலங்கு நல ஆர்வலர்களின் சமூக வலைதளங்கள் மூலமான தவறான பிரசாரம்தான் சின்னத்தம்பி பிரச்னை இவ்வளவு பெரிதாக காரணம்’ என்று கூறபட்டது.

ஹைலைட்ஸ்

  • சின்னத்தம்பியைப் பிடிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்
  • கும்கியாக மாற்றுவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை
  • சின்னத்தம்பி விவகாரம் தேவையில்லாமல் பெரிதாக்கப்பட்டது, தமிழக அரசு

உடுமலை காட்டுப் பகுதியில் சுற்றிவரும் சின்னத்தம்பி யானையை என்ன செய்வது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை, சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மனிதர்கள் வாழும் பகுதியில் உலவி வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினரும், தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் எனும் நிலை எழுந்தது. இதனை பலரும் கண்டித்தனர். இதனால் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது. எனினும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சின்னத்தம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அந்த இரு யானைகளால் சின்னத்தம்பியை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.  

இன்று சின்னத்தம்பி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ‘நீதிமன்ற உத்தரவு நகலுக்காக காத்திருக்க தேவையில்லை. உடனடியாக சின்னதம்பியை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்லலாம். நிரந்தரமாக முகாமில் வைப்பதா, காட்டுக்குள் அனுப்புவதா என பின்னர் முடிவெடுக்கலாம்' என்று உத்தரவிட்டது.

தமிழக அரசு இன்று வாதாடுகையில், ‘விலங்கு நல ஆர்வலர்களின் சமூக வலைதளங்கள் மூலமான தவறான பிரசாரம்தான் சின்னத்தம்பி பிரச்னை இவ்வளவு பெரிதாக காரணம்' என்று கூறபட்டது.

.