Kolkata: விவசாயிகளின் வருமானத்த்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உழைத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி மிட்னாபூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்திற்கான வியூகத்தை வகுத்து பாஜக செயல்பட்டு வருகிறது.
வருகிற பிப்ரவரி மாதத்திற்குள்ளாக 200 பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களாக உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இதனையடுத்து இன்று மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளுக்கான பிரச்னைகளைத் தீர்க்க பாஜக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
சமீபத்தில் 14 காரிப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை பாஜக அரசு உயர்த்தியதன் மூலம் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு இனி நல்ல விலை கிடைக்கும்.
மத்திய அரசு விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க கடினமாக உழைத்து வருகிறது. ஆனால், மேற்கு வங்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆட்சியில் இருப்பவர்கள் சிண்டிகேட் அமைத்து கொள்ளையடிப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். ஆனால், பாஜக நிச்சயம் நிலைமையை மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டத்தின் போது தொண்டர்கள் அமர போடப்பட்ட கூடாரம் சரிந்து விழுந்து, 15 பேர் காயமடைந்தனர். அவர்களையும் பிரதமர் மோடி மருத்துவமனையில் சென்று சந்தித்தார்.