சென்னை உயர் நீதிமன்றம் (High Court)
சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக, அமைதியான முறையில் போராடும் மக்களை தேவையில்லாமல் கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் (High Court) காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை வழிச் சாலையை, 10000 கோடி ரூபாய் செலவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை போலீஸ் வேண்டுமென்றே கைது செய்கிறது என்று வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், ‘சென்னை- சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராக அமைதியான முறையில் போராடும் மக்கள் மீது காவல் துறையினர் கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. யார் அமைதியான முறையில் போராடுகிறார்கள், யார் குழப்பம் விளைவிக்க போராடுகிறார்கள் என்கிற வித்தியாசத்தை காவல் துறை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை நசுக்கும் வகையில் காவல் துறை செயலபடக் கூடாது. போராடும் யார் மீதும் அடவாடியான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது. குறிப்பாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அதனால் நேரடியாக பாதிக்கப்படும் விவசாயிகள் போராடினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சென்னை - சேலம் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது உயர் நீதிமன்றம்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)