Shimla: சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுவரை, இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில், 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக, மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மண்டி மாவட்டத்தில் உள்ள சண்டிகர் - மனாலி தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது. அதைப் போல, மண்டி - பதன்கோட், சம்பா - பதன்கோட், சிம்லா- நஹன் நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது
கன மழையால், சிம்லா, ஷோலன், குல்லு, ஹமிர்புர், காங்ரா, கினாவூர், மண்டி போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிர்மார் மாவட்டத்தில் 239மிமீ மழை பெய்துள்ளது. ஹமிர்புர் மாவட்டத்தில் 238 மிமீ மழையும், மண்டி மாவட்டத்தில் 234 மிமீ மழையும், பலம்பூர் மாவட்டத்தில் 212 மிமீ மழையும் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
மேலும், மாநிலத்தின் தலைநகரான சிம்லாவில் 172 மிமீ மழையும், தரம்சாலாவில் 98 மிமீ மழையும், சோலன் நகரில் 94 மிமீ மழையும், தல்ஹவுசீயில் 57 மிமீ மழையும் பதிவாகியுள்ளது
இந்த வாரம் செவ்வாய்கிழமை வரை இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.