2008 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தான், மிசோரமில் ஆட்சி செய்து வருகிறது
Aizawl: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் சீக்கிரமே தேர்தல் வர உள்ளது. இதனால் அங்கு களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி ஆகியவை, காரசார பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் அம்மாநில பாஜக, ‘எந்தக் கட்சித் தலைவருடனும் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று கூறி பகீர் கிளப்பியுள்ளது.
மிசோரமில் மொத்தம் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கிறித்துவர்களை அதிகமாகக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக இதுவரை ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லை. அதேபோல மிசோரமைத் தவிர்த்து மற்ற வட கிழக்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துவிட்டது பாஜக. இந்த முறை மிசோரமிலும் காலூன்றிவிட வேண்டும் என்று அந்தக் கட்சி முனைப்பாக இருக்கிறது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தின் நிதி அமைச்சரும், மிசோரம் மாநில பாஜக தேர்தல் தலைவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ‘நாங்கள் எங்கள் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்துத்தான் வருகிறோம். அந்த வகையில் மிசோ தேசிய முன்னணி மட்டுமல்ல காங்கிரஸுடனும் எங்களுக்கு இருக்கும் வாய்ப்பை பரிசீலித்து வருகிறோம்.
இதை எப்படி சொல்கிறேன் என்றால், மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸுக்கு வித்தியாசமான சட்ட சாசனம் இருக்கிறது. இங்கு அந்தக் கட்சிக்கு தனிப்பட்ட வரலாறு உள்ளது. மிசோரம் முதல்வர் லால் தன்னாவலா சுதந்திரமான முடிவை எடுக்கிறார்.
மிசோ முன்னணியின் தலைவர்களுடனும் காங்கிரஸ் தலைவர்களுடனும் நாங்கள் நட்பாகவே பழகி வருகிறோம். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை' என்று கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தான், மிசோரமில் ஆட்சி செய்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 34 இடங்களில் வெற்றி பெற்றது. மிசோ முன்னணி, 5 இடங்களைக் கைப்பற்றியது. மிசோ மக்கள் கான்ஃபெரன்ஸ் கட்சி 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.
மிசோ தேசிய முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாகயக் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.