Read in English
This Article is From Sep 14, 2019

Hindi: “இது இந்தியா; ‘இந்தி’யா அல்ல”: அமித்ஷா கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah), இந்தி நாளான இன்று, ஒரு மொழி, மொத்த நாட்டையும் ஒற்றுமையாக வைக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க திமுக தயங்காது - மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

Chennai:

இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி (Hindi) இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “இது இந்தியா; ‘இந்தி'யா அல்ல” என அமித்ஷாவின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

Advertisement

‘வேற்றுமையில் ஒற்றுமை'என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி” எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்' முயற்சியாகவே தெரிகிறது.

Advertisement

அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே கேட்டவர் நம் திமுகவின் நிறுவனர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. 

இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். பிரதமர் மோடி அவர்களும் இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisement

இல்லையெனின், தி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க திமுக தயங்காது. இது இந்தியா. ‘இந்தி'யா அல்ல என திமுக எச்சரிக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்திற்கு எதிராக, மேற்குவங்க முதல்வர் ம ம்தா பானர்ஜி, கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Advertisement

தெற்கில் இருப்பவர்கள் பலரும் இந்தியை இரண்டாவது மொழியாக கற்று வருகின்றனர். ஆனால், வடக்கில் இருப்பவர்கள் யாரும் மலையாளத்தையும், தமிழையும் கற்றுக்கொள்வதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement