சம்பந்தப்பட்ட செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கனிமொழி கோரிக்கை
ஹைலைட்ஸ்
- ஆயுஷ் அமைச்சகத்திற்கு கடிதம்
- அனைத்து அதிகாரிகளும் ஆங்கிலத்தில் அனைத்து கூட்டங்களையும் நடத்த கோரிக்கை
- நான் இந்தியில் பேச விரும்புகிறேன்; ராஜேஷ் கோடெச்சா
Chennai: சமீபத்தில் விமான நிலையத்தில் தூத்துக்குடி எம்.பி கன்மொழி இந்தி குறித்து தனக்கு நேர்ந்த சங்கடத்தினை வெளிப்படுத்தி இந்தியராக இருப்பதற்கு இந்தி மொழி ஒரு அடையாளமா என கேள்வியெழுப்பியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில், ஆயுஷ் அமைச்சகம் சார்பாக யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர்களுக்கான இணையவழி யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்த வகுப்பில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கோடெச்சா இந்தியில் பேசியுள்ளதாகவும், தமிழக மாணவர்கள் இதை குறுக்கீடு செய்தபோது, இந்தி தெரியாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வெளியேறலாம் என்றும் அவர் தெரிவித்ததாக கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆயுஷ் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தன் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த வாக்குறுதியைப் பற்றி நினைவுபடுத்திய கனிமொழி, மக்களவையில் இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களுக்கு ஆங்கிலம் ஒரு இணை மொழியாகத் தேவைப்படும் என்பதை நினைவுபடுத்தி, அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஆங்கிலத்தில் அனைத்து கூட்டங்களையும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் இந்தி தவிர பிர மொழிகளில் சரளமாக பேசாதவர்கள் என்று ஒரு தரப்பு கூறியுள்ளது. ஆன்லைனில் பரப்பப்பட்ட 40 விநாடிகளின் வீடியோ கிளிப்பில் கோடெச்சா “ஆங்கிலம் விரும்புவோர் வெளியேறலாம் ... நான் இந்தியில் சரளமாக இருக்கிறேன், இந்தியில் பேச விரும்புகிறேன்” என கூறுவதைக் கேட்க முடிகின்றது.
.
ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கோடெச்சா
எனினும் இந்த வீடியோவின் நம்பகத் தன்மை குறித்து என்.டி.டிவி எவ்வித உறுதியையும் தெரிவிக்க இயலாது.
“இந்தி அல்லாத மொழி பேசும் பங்கேற்பாளர்கள் அமைச்சின் பயிற்சி அமர்வின் போது வெளியேறலாம் என ராஜேஷ் கோடெச்சா கூறியிருப்பது இந்தி திணிப்பை வலியுறுத்துகின்றது. இது கண்டிக்கத்தக்கது.” என கனிமொழி டிவிட் செய்துள்ளார்.
மேலும், “அரசாங்கம் செயலாளரை இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ளப் போகிறோம்” என்றும் டிவிட் செய்துள்ளார்.