हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 03, 2019

எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை: தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உறுதி!

வரைவு செயல்படுத்துவதற்கு முன்பாக மதிப்பாய்வு செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தங்களது டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Written by

Highlights

  • புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ட்விட்
  • மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே அமல்படுத்தப்படும் என நிர்மலா உறுதி.
  • இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரை.
New Delhi:

எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை என்றும், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. அந்த, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த வரைவு பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

இதேபோல், இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதவில், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்.

பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே ஒரே பாரதம் உன்னத பாரதம் #EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

இதேபோல், எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே புதிய கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்.

அரசு அனைத்து இந்திய மொழிகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement