This Article is From Sep 03, 2018

விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்துக்கு ‘கெடுபிடி’: நீதிமன்றத்தை அணுகிய இந்து முன்னணி

விநாயகர் சதூர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவது குறித்து சில விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது

விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்துக்கு ‘கெடுபிடி’: நீதிமன்றத்தை அணுகிய இந்து முன்னணி

விநாயகர் சதூர்த்தி இன்னும் ஒரு சில நாட்களில் வரவுள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இந்து முன்னணி.

விநாயகர் சதூர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவது குறித்து சில விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அந்த விதிமுறைகளின்படி, ‘விநாயகர் சதூர்த்திக்காக எந்த இடத்தில் விநாயகர் சிலை நிறுவப்படுகிறதோ, அந்த வீட்டின் உரிமையாளர், உள்ளாட்சி அமைப்பு, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய அமைப்புகளிடமிருந்து முறையான சான்றிதழ்கள் பெறப்பட வேண்டும். அதன் பிறகுதான் விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அரசின் விதிமுறைகளுக்கு எதிராக பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்து முன்னணி அமைப்பின் ராமகோபலனும் அரசுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து மனுக்களும் நீதிபதி மகாதேவனுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில், ‘3 முதல் 10 நாட்கள் மட்டுமே நிறுவப்படப் போகும் சிலைக்கு இவ்வளவு கெடுபிடிகள் விதிப்பது சரியல்ல. அரசு சொல்லியிருக்கும் சான்றிதழ்களை உரிய முறையில் வாங்குவதற்கே 1 ஆண்டுக்கு மேல் ஆகும். எனவே அரசின் விதிமுறைகளை ரத்து செய்து தீர்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ‘உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டது’ என்றார்.

பின்னர் நீதிபதி மகாதேவன், ‘அரசு தரப்பு இந்த விஷயம் குறித்து தெளிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும்’ என்று கூறி வழக்கை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.