தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அந்தத் துறையைச் சேர்ந்த பல காவல் துறை அதிகாரிகளே தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருக்கும் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று கூட்டமாக வந்த தமிழக அறநிலையத் துறை அதிகாரிகள், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புதியதாக புகார் கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ‘எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று சவால் விட்டுள்ளனர்.
தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு பணிக் காலம் முடிவடைந்த பின்னரும், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது. சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் அதுவரை நடத்திய விசாரணைகளே பலத்த கேள்விகளுக்கு உள்ளான நிலையில், பணி நீட்டிப்புக்குப் பின்னர் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
குறிப்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களே, அவருக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் கொடுத்ததற்குப் பிறகு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. புகார் அளித்த சிலை கடத்தல் பிரிவு காவலர்கள், ‘கடந்த ஓர் ஆண்டாக, எங்களுக்கு பொன்.மாணிக்கவேல் பல விதங்களில் அழுத்தம் கொடுத்து வந்தார். அவரே, ஒருவர் குறித்து ஆவணங்கள் கொடுப்பார். அவர்தான் குற்றவாளி என்றும், கைது செய்யுங்கள் என்றும் எங்களிடம் கூறிவிடுவார். அது குறித்து எந்தவித மேல் தகவலும் சொல்லப்படாது.
ஒரு கட்டத்தில் எங்களால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று மாணிக்கவேலிடம் சொன்னோம். அதனால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இந்நிலையில்தான் டிஜிபி-யிடம் மனு கொடுக்க நாங்கள் வந்துள்ளோம். இனியும் பொன்.மாணிக்கவேல் தலைமையில் எங்களால் பணி செய்ய முடியாது என்றும், நீங்களே இது குறித்து ஒரு வழி சொல்லுங்கள் என்றும் டிஜிபி-யிடம் கேட்டுள்ளோம்' என்று அதிர்ச்சியளிக்கும் விதத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்நிலையில் இன்று அறதிலையத் துறை அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் வந்து பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அடுக்கடுக்காக புகார்கள் கொடுத்துள்ளனர். புகார் அளித்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறநிலையத் துறை அதிகாரி தென்னரசு, ‘நாங்கள்தான் சிலைத் திருட்டு குறித்து புகார் தெரிவிப்பதே. ஆனால், அது குறித்து முறையாக விசாரிக்காமல் எங்களையே பொன்.மாணிக்கவேல் கைது செய்கிறார். நாங்கள் வெளிப்படையாக சவால் விடுகிறோம். எப்படிப்பட்ட விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் மீது தவறிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் கேட்பதெல்லாம், ஒழுங்கான விசாரணை மட்டும்தான். அதைச் செய்தாலே பல்வேறு உண்மைகள் வெளிவரும்' என்றுள்ளார்.