This Article is From Dec 19, 2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது!!

நாட்டின் பல்வேறு நகரங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது!!

பெங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக பெங்களூருவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு டவுன் ஹாலில் போராட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதுக்கு பின்னர் NDTV க்கு அளித்த பேட்டியில், ‘காந்தி போஸ்டரை கையில் வைத்ததற்காகவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியதற்காகவும் போலீசார் என்னை கைது செய்துள்ளனர்'  என்று தெரிவித்தார்.

 Citizenship Amendment Act (CAA) குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், போராட்டங்கள் நடைபெறுவதை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் நாடுகளில் மத பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்படும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை சட்டம் குடியுரிமையை வழங்குகிறது. இதில் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டம் மீறப்படுவதாகவும் கூறி போராட்டங்கள் நடக்கின்றன.

பெங்களூருவில் இன்று போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கர்நாடகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா அளித்துள்ள பேட்டியில், ‘போராட்டங்கள் அனைத்துக்கும் காங்கிரஸ்தான் காரணம். முஸ்லிம்களை பாதுகாப்பது என்பது எங்களது கடமை. அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை காங்கிரஸ்காரர்கள் தூண்டி விட்டால், அதற்கான பின் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.

.