"அரசியல் சட்ட சாசனத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், இன்று காஷ்மீரில் நடந்தது நாளை உங்கள் மாநிலத்திலும் நடக்கும்”
ஹைலைட்ஸ்
- சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் தவறு: குஹா
- அமைதியாக இருப்பதால் விளைவுகள் மோசமாக இருக்கும்- குஹா
- ஜனாதிபதி நடந்து கொண்ட விதம் பற்றியும் வருத்தம் தெரிவித்துள்ளார் குஹா
New Delhi: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இது குறித்து பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, “இப்படி தன்னிச்சையாக காஷ்மீர் பிரச்னையில் பாஜக ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், நாளை எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இது காஷ்மீர் குறித்த பிர்சனை அல்ல. ஒரு அரசு, தனக்கிருக்கும் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் யோசித்துப் பார்க்க வேண்டும். 1.2 கோடி மக்கள் இருக்கும் ஒரு மாநிலம் குறித்து எடுக்கப்பட்ட முடிவு அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளாமலேயே எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அரசியல் சட்ட சாசனத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், இன்று காஷ்மீரில் நடந்தது நாளை உங்கள் மாநிலத்திலும் நடக்கும்” என்று குஹா மேலும் பேசியுள்ளார்.
ஜனாதிபதி, காஷ்மீர் விவகாரத்தில் நடந்து கொண்டது பற்றி குஹா, “மிகவும் சிக்கலான ஒரு விஷயம் குறித்து ஜனாதிபதிக்கு ஒரு கோப்பு வருகிறது என்றால், அது குறித்து நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். அதுவும் காஷ்மீர் போன்ற விவகாரத்தில்… முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், போன் இணைப்பு, இணைய சேவை என எல்லாம் முடக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் ஜனாதிபதி சரியாக நடந்து கொள்ளவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று காலை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த ஆணை பிறப்பிக்கப்பட்ட போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்டி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
முடிவாக குஹா, “நேரு பிரதமராக இருந்தபோது, 1953 ஆம் ஆண்டு, காஷ்மீரின் முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லாவை சிறையில் அடைத்தார். அதைத் தான் நரேந்திர மோடியும் செய்ய விரும்புகிறாரா. இல்லை, அடல் பிகாரி வாஜ்பாய், மொராஜி தேசாய் போல நடந்து கொள்ள விரும்புகிறாரா. அவர்கள்தான், காஷ்மீரில் நியாயமான தேர்தலை நடத்தினார்கள்” என்றார்.