This Article is From Aug 28, 2018

‘காந்தியையே கைது செய்திருப்பர்!’- மோடி அரசுக்கு எதிராக பொங்கும் வரலாற்றாசிரியர்

அறிவுஜீவிகள் மீது இன்று நடத்தப்பட்ட ரெய்டுகள் மற்றும் கைது நடவடிக்கை குறித்து பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்

New Delhi:

பல நகரங்களிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் மீது இன்று நடத்தப்பட்ட ரெய்டுகள் மற்றும் கைது நடவடிக்கை குறித்து பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மிகப் பிரபலமான வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹா, ‘மோடி அரசு, மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவரையே கைது செய்திருக்கும்’ என்று கொதித்துள்ளார்.

ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக ஒன்பது செயற்பாட்டாளர்களின் வீடுகளில் இன்று புனே போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி, ஃபரீதாபாத், கோவா, மும்பை, தானே, ராஞ்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

பிரதமர் மோடியைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் பங்குபெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இடதுசாரி கொள்கையாளரும் கவிஞருமான வரவர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் எல்கர் பரிஷத் என்ற பெயரில் புனேவில் நடந்த நிகழ்ச்சியே மறுநாள் பீமா கோரேகான் வன்முறை நடைபெறத் தூண்டுகோல் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வரவர ராவின் பெயர் இடம்பெற்ற கடிதம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

1818இல் மராத்தா பேஷ்வாக்களுடன் நடந்த போரில் வென்றதன் 200வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இருந்து தலித் மக்கள் பீமா கோரேகானில் டிசம்பர் 31 அன்று கூடினர்.

இதையடுத்து, ஜனவரி ஒன்றாம் தேதி தலித் செயற்பாட்டாளர்களுக்கும் மராட்டிய சாதி இந்துக்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து, மும்பை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் இவ்வன்முறை பரவியது. தற்போது இதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை குறித்து ராமச்சந்திர குஹா, ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளேன் என்கிற அடிப்படையில் சொல்கிறேன், இன்று மட்டும் காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவர் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழக்கறிஞராக மாறியிருப்பார். மோடி அரசு, அவரை இன்னும் கைது செய்யாமல் விட்டிருக்கும் என்பதன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன்’ என்று ட்விட்டரில் கருத்திட்டுள்ளார்.

.