Ayodhya case verdict: தினசரி வாக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதியுடன் விசாரணை முடிவு பெற்றது
New Delhi: சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில், அயோத்தி வழக்கில் (Ayodhya Case) தீர்ப்பு வழங்க உள்ளது உச்ச நீதிமன்றம் (Supreme Court). வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (Ranjan Gogoi) தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, ஆலோசனைக்குப் பிறகு தீர்ப்பு வெளியிட முடிவு செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி, அயோத்தி வழக்கை விசாரித்து முடித்து தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். இன்று உத்தர பிரதேச அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து சட்ட ஒழுங்கு குறித்து விசாரித்தப் பிறகு, தீர்ப்பு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
நீதிபதிகள் எஸ்.ஏ.போட்கே, சந்திராசூத், அஷோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.
அயோத்தி வழக்கில் எப்படிப்பட்ட தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும், அனைவரும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளும் அலெர்ட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் 3 மணி நேர ஆலோசனை நடத்தியுள்ளார்.
சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் நம்பி வருகின்றனர். இந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்குத்தான் சுமார் 28 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது.
இதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் நடுவர்களாக இருந்து பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். அவர்களிடம் பிரச்சனைக்கு உரிய நபர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்கள்.
இதன்பின்னர் நடுவர் குழு சார்பாக, இவற்றையெல்லாம் செய்தால் பிரச்னையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது குறித்து, அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின்னரும் முடிவு எட்டப்பவில்லை.
இதையடுத்து தினசரி வாக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதியுடன் விசாரணை முடிவு பெற்றது. அதன்பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.