This Article is From Feb 25, 2020

'வரலாறு உருவாக்கப்பட்டு விட்டது' - நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி பேச்சு!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின்போது ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இந்தியா வந்த டிரம்புக்கு 'நமஸ்தே டிரம்ப்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.

'வரலாறு உருவாக்கப்பட்டு விட்டது' - நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி பேச்சு!

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியின் பெயர் மிக ஆழமான கருத்தை உள்ளடக்கியது என்று மோடி கூறியுள்ளார்.

Ahmedabad (Gujarat):

வரலாறு உருவாக்கப்பட்டு விட்டது என்று நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் மோட்டேரா மைதானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை அவர் வரவேற்றபோது இவ்வாறு தெரிவித்தார்.

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது-

வரலாறு மீண்டும் திரும்புவதை நாம் இங்குப் பார்க்க முடிகிறது. 5 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இன்றைக்கு எனது நண்பர் டிரம்ப் தனது இந்தியப் பயணத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு டிரம்ப்பை வரவேற்கிறது. இது குஜராத்தாக இருப்பினும் ஒட்டுமொத்த நாடே டிரம்ப்பை வரவேற்கிறது.

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியின் பெயரில் உள்ள நமஸ்தே என்ற வார்த்தைக்கு மிக ஆழமான அர்த்தம் உண்டு.

இந்த வார்த்தை உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வார்த்தைக்கு நாம் ஒருவருக்கு மரியாதை அளிக்கிறோம் என்பது மட்டும் பொருள் அல்ல; மாறாக எதிர்த்தரப்பில் உள்ளவரின் மனதிற்குள் தெய்வீகத்தன்மையை நாம் விதைக்கிறோம்.

இவ்வாறு மோடி பேசினார். சந்திப்பின்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இந்தியாவில் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, கவர்னர் ஆச்சார்ய தேவ்ராத், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

டிரம்புடன், மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் குஷ்ணர் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனர். 

முதலில் சமபர் மதி ஆசிரமத்திற்குச் சென்ற டிரம்ப், மெலனியா ஆகியோர் அங்கு ஆசிரமத்தைப் பார்வையிட்டதுடன் பார்வையாளர் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டனர். 

மகாத்மா காந்தியின் கொள்கையான தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே என்பதை விளக்கும் குரங்கு பொம்மைகளையும் அவர்கள் பார்வையிட்டனர். 

அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவி வரவேற்றார்.

மாலையில் ஆக்ராவுக்குச் சென்ற டிரம்பும் மற்ற விருந்தினர்களும், அங்கு தாஜ்மஹாலை பார்வையிட்டனர். 

.