மூன்றாம் அணி அமைப்பது தொடர்பாக பல மாநில முதல்வர்களை தொடர்ந்து சந்தித்த வண்ணம் இருக்கிறார் ராவ்.
Hyderabad: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ‘கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் தரங்கெட்டவர்' என்று விமர்சனம் செய்துள்ளார்.
ராவ் தொடர்ச்சியாக, ‘காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாம் அணி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்' என்று சொல்லி வருகிறார். இது தொடர்பாக அவர் பல மாநில முதல்வர்களை தொடர்ந்து சந்தித்த வண்ணம் இருக்கிறார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராவ், ‘தேர்தல் வர இன்னும் வெகு நாட்கள் இருக்கின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மாற்று அணி, உருவாக 100 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்னர் எப்படியாவது அந்த முயற்சியில் நல்ல பலனையடைய நாங்கள் முயல்வோம். இந்த தேசத்துக்கு புதிய அதிகாரமும் திட்டமும் தேவைப்படுகிறது' என்று பேசியுள்ளார்.
அவர் மேலும், ‘தற்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார மற்றும் வேளாண் திட்டங்கள் சுத்தமாக வேலை செய்யவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக மக்களை ஏமாற்றிவிட்டனர். எனவேதான் மாற்று அணிக்கான முயற்சியை நான் தொடங்கியுள்ளேன். நான் மிகவும் வெளிப்படையாக இருக்கப் போகிறேன். எனக்கு, யாரைப் பற்றியும் கவலையில்லை. எந்த பயமும் இல்லை. தொடர்ந்து மாற்று அணிக்காக உழைக்கப் போகிறோம். அடுத்த சில நாட்களில் அது நல்லப் பயனைத் தரும்' என்று நம்பிக்கை ததும்ப கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு குறித்து பேசுகையில், ‘கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் தரங்கெட்டவர் சந்திரபாபு. நான் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மாற்று அணிக்காக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நாயுடு பேசுவது என்ன. அவருக்கு, தான் என்ன பேசுகிறோம் என்பது பற்றி தெளிவு இருக்கிறதா. அவர் ஒரு அரசியல் தலைவரே கிடையாது. ஒரு மேனேஜர். ஆந்திர பிரதேசத்தில் அடுத்து நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி கண்டிப்பாக மண்ணைக் கவ்வும்' என்று கொதித்தார்.