This Article is From Jan 04, 2019

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம்: தமிழக அரசை சாடிய நீதிமன்றம்!

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் உரிய தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி?’ என்று கூறி தமிழக அரசை உடனடியாக பதில் அளிக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம்: தமிழக அரசை சாடிய நீதிமன்றம்!

சில வாரங்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரத்தம் தானம் செய்த இளைஞர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த மாதம் 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது. இளைஞருக்கும், தனக்கு எச்.ஐ.வி இருந்தது குறித்து தெரிந்திருக்கவில்லை. விஷயம் தெரிந்தவுடன், இளைஞர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் மற்றும் கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் கொடுக்கப்பட்டு வந்தது. இளைஞர் சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிடவே, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட பின்னர் நீதிமன்றம், ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் உரிய தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி?' என்று கூறி தமிழக அரசை உடனடியாக பதில் அளிக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று இதே வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம், ‘வரும் ஜனவரி 22 ஆம் தேதியன்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி இந்த விஷயம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தது.

.