விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது.
பின்னர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக ரத்தம் கொடுத்த அந்த இளைஞர் சோதனை செய்த போதுதான் தெரியவந்தது, அவருக்கு எச்.ஐ.வி உள்ளது என்பது. இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணியின் ரத்தத்தை சோதனை செய்த போது அவருக்கும் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று பலர் முறையிட்டுள்ளனர். இதையடுத்து நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு இது குறித்து வரும் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.