விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கர்ப்பிணி என்பதால் அவரது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை.
குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது.
பின்னர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக ரத்தம் கொடுத்த அந்த இளைஞர் சோதனை செய்த போது தான் தெரியவந்தது, அவருக்கு எச்.ஐ.வி உள்ளது என்பது. இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணியின் ரத்தத்தை சோதனை செய்த போது அவருக்கும் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது.
இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சாத்தூர் வாலிபர் ரத்ததானம் செய்வதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14 ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலன் தனது டிவிட்டர் பதிவில்,
இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?
உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்!
குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.