சென்ற வாரம் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்ற வாரம் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததாக அமித்ஷா கூறி வந்ததைத் தொடர்ந்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் தரப்பு கூறியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துமனையின் ஊடகப் பிரிவு தலைவர், மருத்துவர் ஆர்த்தி விஜ், “கடந்த 3 - 4 நாட்களாக உடல் சோர்வு குறித்தும் உடல் வலி குறித்தும் கூறிவந்தார் அமித்ஷா. அவருக்கு கோவிட்-19 நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. கோவிட் கேருக்காக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே தன் பணிகளை செய்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் குர்கான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட சிகிச்சை எடுத்து வந்தார் அமித்ஷா. 55 வயதாகும் அமித்ஷா, கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட பின்னர், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சில நாட்களுக்கு வீட்டுத் தனிமையில் இருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
3 வாரங்களுக்கு முன்னர் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமித்ஷா பங்கெடுத்தார். அதன் பிறகுதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாத்துப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் சமூக விலகல் நடைமுறை உட்பட அனைத்து முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டன. அந்தக் கூட்டத்தில்தான் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் அமித்ஷாவோடு தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.