காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து மாநிலங்களவையில் அமித் ஷா உரையாற்றினார்.
New Delhi: காஷ்மீரில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இணையதள சேவைகள் முடக்கப்பட்டு நிலையில், காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து உள்ளூர் நிர்வாகம் திருப்தி அளிக்கும் நேரத்தில் இணையதள சேவைக்கான தடைகள் தளர்த்தப்படும் என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும்நிலையில், இன்று காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, காஷ்மீரில் உள்ளூர் நிர்வாகம் உறுதியாக இருக்கும் பட்சத்தில், இணைய சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அண்டை நாட்டு ஆர்வலர்களும் காஷ்மீரில் பதுங்கியுள்ளனர். அதனால், பாதுகாப்பு காரணங்களை கருதி, உள்ளூர் நிர்வாகம் பாதுகாப்பான சூழ்நிலையை உணரும் பட்சத்தில் இணைய சேவையை மீண்டும் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஸ்ரீநகரின் தெருக்களில் ரத்த ஆறு ஓடுவதாக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அப்படி எந்தவித நிகழ்வுகளும் அங்கு நடைபெறவில்லை. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு ஒருவர் கூட பலியாகவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கடந்த ஆகஸ்ட்-5ஆம் தேதி ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கி வரப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், மாநிலத்தை ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்காக, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைக்காட்சி, செல்போன், இணையதளம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டுன.
மாநிலம் முழுவதும் 144 தட உத்தரவு பிறப்பிக்கப்பட்டன, அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெரும் அளவிலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பரிவு 370 ரத்து செய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், அங்கு படிப்படியாக தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வந்தன. முதலில் செல்போன் சேவைகளுக்கான தடை தளர்த்தப்பட்டது. பின்னர் போஸ்ட்பெய்டு மற்றும் லேண்ட்லைன் சேவைகளுக்கான தடைகளும் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா கூறும்போது, காஷ்மீரில் தற்போது அனைத்து செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும் இயங்குகின்றன. நான் குலாம் நபி ஆசாத்துக்கு சவால் விடுக்கிறேன். நான் இங்கு தெரிவித்த தகவல்களை, உண்மை இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? இந்த விவகாரம் குறித்து ஒரு மணி நேரம் கூட ஆலோசனை செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.