அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார்
Ahmedabad: சுற்றுச் சூழலை பாதுக்காக்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பெண்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது-
துணிப் பைகளை கொண்டு செல்வது என்பது நாகரிகமற்றதாக இருக்கலாம் என பெண்கள் கருதினாலும், அதுதான் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் இருக்கும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்குத்தான் தூய்மை இந்தியா திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், மக்கள் இந்த திட்டத்தின் மகத்துவத்தை உணரவில்லை என்பதுதான் முக்கிய தடையாக இருக்கிறது.
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசியபோதும் கூட, மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
பெண்கள் ஷாப்பிங் செல்வதாக இருந்தால் பிளாஸ்டிக் பையை தவிர்த்துக் கொள்ளுமாறு பெண்களை கேட்டுக் கொள்கிறேன். அதற்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்தலாம். அது குறைந்தது 10 ஆண்டுகளுக்கு கிழியாமல் இருக்கும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.