This Article is From Sep 28, 2018

மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா..?- ராஜ்நாத் சிங் சூசகப் பேச்சு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடந்து 2 ஆண்டுகள் ஆகின்றன

பாகிஸ்தான் முதலில் சுட்டால், நீங்கள் எவ்வளவு புல்லட்களை சுடுகிறீர்கள் என்று கணக்கு வைக்காதீர்கள் என்று பி.எஸ்.எப் படையிடம் கூறியுள்ளேன், ராஜ்நாத் சிங்

New Delhi:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அதைப் போற்றும் விதத்தில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவம், மீண்டுமொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருக்கக்கூடும் என்று தெரிகிறது. இது குறித்தான தகவலை மறைமுகமாக தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

கடந்த 2016, செப்டம்பர் 29 அன்று இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தியது. உரி பகுதியில் இந்திய ராணுவத்தின் இடத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இந்தியாவுக்குள் ஊடுருவ இருந்த தீவிரவாதிகள் பலரை இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று உத்தர பிரதேச, முசாஃபர்நகரில் பேசிய ராஜ்நாத் சிங், ‘நமது அண்டை நாடான பாகிஸ்தான், தொடர்ந்து அமைதியை குலைக்கும் விதத்தில் நடந்து வருகிறது. அவர்களின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அது என்னவென்பது குறித்து நான் சொல்லமாட்டேன். ஆனால் என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 2, 3 நாட்களுக்கு முன்னால் அந்த சம்பவம் நடந்தது. சிலருக்கு அது குறித்து தெரியும். நீங்களும் சீக்கிரமே அது குறித்து அறிவீர்கள்’ என்று சூசகமாக இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பேசியுள்ளார்.

ராணுவத் தளபதி பிபின் ராவத்தும் சமீபத்தில், ‘மீண்டுமொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அது எப்படி நடத்தப்படும் என்கின்ற விவரத்தை நான் சொல்லமாட்டேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பல பொதுக் கூட்டங்களில் பெருமையுடன் பேசினர். தங்களது வலிமையான ஆட்சி நிர்வாகத்தினால் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று தொடர்ந்து கூறி வந்தனர் பாஜக தலைவர்கள்.

ஆனால் காங்கிரஸோ, இதைப் போன்ற பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் முன்னரும் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், அது குறித்து வெளியே தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியது. பாஜக தான் அரசியல் ஆதாயங்களுக்காக வெளிப்படையாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து தெரிவித்தது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

.