துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
New Delhi: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் பிற துணை ராணுவ படையினர் வர்த்தக விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மூ- காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவர், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினார். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, துணை ராணுவ வீரர்களை பேருந்தில் அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அதாவது, வான் மார்க்கமாக அழைத்து சென்றிருந்தால், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்காது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், துணை ராணுவ வீரர்கள் பணியில் சேருவதற்கோ அல்லது விடுமுறையில் செல்வதற்கோ டெல்லி-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-டெல்லி, ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர்-ஜம்மு ஆகிய பிரிவுகளில் வான்வழியே இலவசமாக விமான பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் காவலர், தலைமை காவலர் மற்றும் துணை காவலர் உள்ளிட்ட பதவிகளை சேர்ந்த 7,80,000 வீரர்கள் பயன்பெறுவர்.
பணியின் போதும், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் போதும், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் போதும் விமானத்தில் பயணம் செய்யலாம். இதன் மூலம், வீரர்களின் பயண நேரம் வெகுவாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.