அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில், சாலை ஓரம் நின்று வேலை வாய்ப்பு கேட்டவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
“வீடற்று இருக்கிறேன். வாழ்க்கையில் வெற்றி அடைய, எனக்கு ஒரு வேலை வேண்டும்” என்ற பதாதையை ஏந்தியப்படி சாலை ஓரம் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 26 வயதாகும் கசாரெஸ் என்ற அந்த நபர், கடந்த ஒரு வருடமாக தனது காரில் வசித்து வருகிறார். நேர்முகத் தேர்விற்கு செல்ல இருப்பது போல, பேண்ட்-ஷர்ட்டு, டை, அணிந்து சாலை ஓரம் நின்று கொண்டிருந்தார்.
வீடற்று இருக்கும் கசாரெஸ், தகவல் மேலான்மை பட்டப்படிப்பை முடித்த பின்பும், பல மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வருகிறார். இதற்கு முன்பு, லோகோ டிசைன், இணையத்தள டிசைன் போன்ற வேலைகளை பார்த்து வந்துள்ளார். திறமையான பணியாளர் என்றாலும், நிரந்தரமான வேலை வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்துள்ளது.
பதாதையுடன் சாலை ஓரம் நின்ற கசாரெஸை பார்த்த ஜாஸ்மின் ஸ்க்கோபீல்டு என்ற பெண், தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். “தொழில்நுட்பத் துறையில் வெற்றி அடைய வேண்டும் என்று இந்த இளைஞர் முயற்சி செய்து வருகிறார். வீடற்ற இந்த நபர் பூங்காவில் வசித்து வருகிறார். நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டார். கடந்த சனிக்கிழமை அன்று பதிவிடப்பட்ட இந்த ட்வீட், சிறிது நேரத்திலேயே 2.1 லட்சம் லைக்ஸ், 1.3 லட்சம் ரீ-ட்வீட்ஸ் கொண்டுள்ளது.
அதனை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து கசாரெஸுக்கு வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக, கூகுள், நெட்ப்ளிக்ஸ், லின்கிடென் போன்ற முன்னனி நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. இதன் மூலம், கசாரெஸுக்கு வேலை வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் மூலம் பிறருக்கு உதவி செய்வது குறித்து பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். சமூக வலைத்தளங்கள் மூலம் செயற்கரிய செயல்களை செய்ய முடியும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் நடந்தேறியுள்ளது. கசாரெஸிற்கு வேலை வாய்ப்பு கிடைத்தது குறித்து சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Click for more
trending news