Honeymoon cystitis: பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்வதில் கணவன் - மனைவி இருவருமே கவனமாக இருக்க வேண்டும்.
Honeymoon cystitis: திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆம். மற்ற உறவுகளில் இல்லாத பிடிப்பும், நெருக்கமும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் இவ்வுறவில் மிகுதியாக இருப்பதே திருமணத்திற்கு உரிய பெருமை. இருவேறு கருத்துடையவர்களை, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை இணைக்கும் திருமணம் என்னும் உறவு ஆயுட்காலம் வரை நிலைத்திருக்க புரிதல் மிகவும் அவசியமானது. அந்த புரிதல் என்பது பொதுவான விஷயங்களில் தொடங்கி அந்தரங்க விஷயம் வரை பரஸ்பரமாக இருத்தல் வேண்டும். ஆண், பெண் என இருபாலருக்குமே திருமணம் குறித்த கனவுகள், எதிர்பார்ப்புகள், சந்தேகங்கள் போன்றவை இருப்பது சகஜம்தான். திருமணமான பிறகு புதுமண தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள தனிமையே தக்கத்துணை. காதல், ஸ்பரிசம், புரிதல், இணக்கம், ஸ்நேகம் மற்றும் காமம் ஆகிய அனைத்தையும் சாத்தியப்படுத்தக்கூடியது தேனிலவு. கணவன் - மனைவிக்கே உரிய உவப்பான தருணங்கள் பல தேனிலவில்தான் கிடைக்கக்கூடும். தம்பதிகள் தங்களுக்கென தனியே நேரம் ஒதுக்கி, பேசி, பழகி, உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்து, காதலிக்க தொடங்கி, போதுமான அளவு தாம்பத்தியத்தில் ஈடுபட வழிவகுப்பது தேனிலவு.
தேனிலவு என்ற சொல்லில் இருக்கக்கூடிய உற்சாகமும், பேரானந்தமும் அது தரக்கூடிய அனுபவங்களிலும் இருக்கிறதா என்றால் நிச்சயம் கிடையாது. நம்மில் பெரும்பாலானோர்க்கு தேனிலவு இனிமையானதாக இருப்பதில்லை. மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் இரு உயிர்களை இணைக்கக்கூடிய தாம்பத்திய உறவு நிச்சயம் உவப்பானதாக இருக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஏற்படக்கூடிய பரஸ்பர புரிதல்களும் திருமணம் என்னும் பந்தம் உறுதியாக இருக்க முக்கிய காரணியாக இருக்கிறது. தாம்பத்தியத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களும், தவறான புரிதல்களும், திருப்தியின்மையும் திருமண உறவு முறிவதற்கு காரணமாகவே அமைகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவருக்குமே உடல் ரீதியான மாற்றங்கள் நிறைய ஏற்படும். அதிலும் குறிப்பாக பெண்கள். தாம்பத்தியத்தின் போதும், அதற்கு பிறகும் பெண்களின் உடலில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறும். மகிழ்ச்சியில் திளைத்திருக்க தேனிலவு செல்லும் புதுமண தம்பதிகளுக்கு ஏற்படக்கூடிய சிக்கல் தான் “ஹனிமூன் சிஸ்டைடிஸ்”. இந்த ஹனிமூன் சிஸ்டைடில் குறித்து விவரமாக விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் திவ்யா பிரகாஷ்.
ஹனிமூன் சிஸ்டைடிஸ் என்றால் என்ன?
திருமணமான புதுமணப் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை தான் ஹனிமூன் சிஸ்டைடிஸ். ஆண்களுக்கு இந்த பிரச்னை இருக்காது. திருமணமான புதிதில் கணவன் - மனைவி அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவார்கள். தொடர்ச்சியாக உடலுறவு வைத்து கொண்டு பிறப்புறுப்புகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருக்கும்போது, அதில் கிருமித்தொற்று உருவாகும். அந்த கிருமித்தொற்றால் உருவாகும் அழற்சிதான் ஹனிமூன் சிஸ்டைடிஸ். ஆண், பெண் இருவருமே உடலுறவுக்கு முன்பும், உறவுக்கு பின்பும் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். ஒருவேளை ஆண்களின் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பின் உடலுறவின் போது பெண்ணுக்கு அந்த கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பிறப்புறுப்புகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொண்டால் ஹனிமூன் சிஸ்டைடிஸில் இருந்து தப்பலாம்.
அறிகுறிகள் என்ன:
* சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி, எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்றவை ஏற்படும்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல், கலங்கலான மற்றும் இரத்தத்துடன் சிறுநீர் வெளியேறுதல், சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் நாற்றம், வலி, காய்ச்சல், நடுக்கம் போன்றவை ஏற்படும்.
* உடலுறவின் போது வலி, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
பெண்ணின் உடல் அமைப்பு:
பெண்ணின் உடலைப்பில் சிறுநீர்த் துவாரம், ஜனனப்பாதை, ஆசன வாய் ஆகிய மூன்றும் அருகருகே அமைந்திருப்பதால் ஒன்றில் ஏற்படும் கிருமித்தொற்று மற்றொன்றை எளிதில் பாதித்துவிடும். சிறுநீர் பைக்கும் சிறுநீர்த் தாரைக்குமான தொலைவு ஆன்களை காட்டிலும் பெண்களுக்கு மிகவும் குறைவு. அதாவது ஆண்களுக்கு 15 செ.மீ அளவும், பெண்களுக்கு வெறும் 4 செ.மீ அளவுமே இருக்கிறது. ஆகையால் சுகாதாரத்தில் கவனக் குறைவு ஏற்பட்டால் சிறுநீர்த் தாரையில் தொற்று ஏற்பட்டு அந்த கிருமி சில சமயங்களில் சிறுநீரகத்தை பாதித்து சீல் உருவாகி நாட்பட்ட உபாதைகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. மேலும் உடலில் ஏதேனும் கிருமித் தொற்று இருக்கும்போது கருத்தரிக்க முடியாமலும் போகலாம்.
தவிர்ப்பது எப்படி?
புதுமணத் தம்பதிகள் எப்போது உடல் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் கணவன் - மனைவி இருவருமே ஆரோக்கியமாக இருப்பதுடன், ஒருவருக்கொருவரின் நெருக்கத்தையும் அதிகரிக்கும். இனிமையான உறவிற்கு உடல் சுகாதாரம்தான் அடிப்படையானது. ஹனிமூன் சிஸ்டைடிஸை தவிர்க்க உடலுறவுக்கு முன்பும், பின்பும் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்து கொள்ளலாம். உடலுறவுக்கு பின் உடனடியாக சிறுநீர் கழிப்பதால் கிருமிகள் வெளியேற்றப்படுகிறது. உடலுறவுக்கு பின் பிறப்புறுப்புகளை உடனடியாக கழுவி சுத்தம் செய்துவிட்டால் கரு உண்டாவது தாமதமாகும் என்னும் தவறான புரிதல் பலரிடம் இருக்கிறது. ஆனால் அப்படி அல்ல. உடலுறவுக்கு பின் 15 நிமிடங்கள் கழித்து சுத்தமாக கழுவுவதால் கிருமித் தொற்றில் இருந்து விடுபடலாம். அதேபோல பிறப்புறுப்புகளை சுத்தம் செய்யும்போது, முதலில் முன்புறத்தை சுத்தம் செய்துவிட்டு தான் ஆசன வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஆசன வாயை சுத்தம் செய்த பிறகு மீண்டும் முன்புறம் சுத்தம் செய்யும்போது கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் அதில் கவனமாக இருத்தல் வேண்டும். மேலும் உடலுறவின் போது உராய்வு தன்மையை எளிதாக்க Ky jelly போன்ற வழவழப்பான ஜெல்லியை பயன்படுத்தலாம்.
தவிர்க்க வேண்டியவை:
* பிறப்புறுப்புகளை சுத்தம் செய்ய கடுமையான இரசாயணங்கள் நிறைந்த சோப்களை பயன்படுத்த கூடாது. சில பெண்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உறுப்பில் நேரடியாக டெட்டால் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. பெண்கள் எப்போதுமே தங்கள் பிறப்புறுப்பில் டெட்டால் பயன்படுத்த கூடாது. தற்போது பிறப்புறுப்புகளை சுத்தப்படுத்துவதற்காகவே மார்கெட்களில் பிரத்யேகமாக ஜெனிட்டல் வாஷ்கள் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம். அல்லது பேபி சோப் பயன்படுத்தலாம்.
* வெந்நீரை கொண்டு பிறப்புறுப்புகளை சுத்தம் செய்யக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்வதே சிறந்தது.
* பெண்கள் பிறப்புறுப்புகளில் இருக்கக்கூடிய ரோமங்களை நீக்க ஹேர் ரிமூவல் க்ரீம்களை பயன்படுத்தக்கூடாது. அதேபோல ஷேவ் செய்யவும் கூடாது. மாறாக ட்ரிம் செய்து கொள்வது நல்லது. பிறப்புறுப்புகளில் டியோட்ரண்ட் மற்றும் பெர்ஃப்யூம் போன்ற வாசனை திரவியங்களை உபயோகப்படுத்தக்கூடாது.
உணவு:
ஹனிமூன் சிஸ்டைடிஸ் ஏற்படாமல் இருக்க நாள் ஒன்றிற்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட பின் இளநீர், மோர், பழச்சாறுகள், குறிப்பாக கிரான்பெர்ரி ஜுஸ் நிறைய எடுத்துக் கொள்ளலாம். சிறுநீர்த் தாரை தொற்றை குணமாக்க தன்மை கிரான்பெர்ரிக்கு உண்டு. அதேபோல காபி, சோடா போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது.
பரிசோதனை:
மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது அவசியம். இதனை உறுதிப்படுத்த முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். சிறுநீர்த் தாரையை பாதிக்கக்கூடிய சுமார் 22 கிருமிகளுள் எந்த கிருமியால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பின் அதற்கு ஏற்றாற்போல ஆண்டிபையாடிக்ஸ் கொடுக்கப்படும்.
பசுமையான நினைவுகளையும், இனிமையான அனுபவங்களையும், உவப்பான தருணங்களையும் கொடுக்கக்கூடிய தேனிலைவை மனநிறைவுடன் கொண்டாட நீங்கள் உடலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேனிலவு கசப்பானதாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஹேப்பி ஹனிமூன்!!