தொடர்ந்து இரண்டாவது நாளாக ஜனநாயக ஆதரவு சக்திகள் விமான நிலையத்தை ஆக்கிரமித்ததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது
ஹைலைட்ஸ்
- இரண்டாவது நாளாக இந்தப் பிரச்னை நீடித்து வருகிறது
- விமான நிலையம் இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை
- ஹாங்காங்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது
Hong Kong: ஹாங் காங்கில் இருக்கும் ஜனநாயக ஆதரவு சக்திகள், அந்த பிராந்தியத்தின் விமான நிலையத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானங்களை ரத்து செய்துள்ளது அரசு நிர்வாகம்.
இது குறித்து ஹாங் காங் விமான நிலைய அலுவலகம், “ஹாங் காங் சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்குக் கடுமையான இடையூறு எழுந்துள்ளன. இதனால் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுகின்றன. விமான நிலையத்திற்குள் இருக்கும் அனைத்துப் பயணிகளும், கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தனது அதிகாரபூர்வ தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வெளியிலிருந்து ஹாங் காங் வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டனவா என்பது குறித்து எந்தவித தகவலையும் விமான நிலைய நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஜனநாயக ஆதரவு சக்திகள் விமான நிலையத்தை ஆக்கிரமித்ததுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக போராட்டக்காரர்கள், பயணிகள் விமான நிலைய நுழைவாயிலில் இருந்து விமானம் எடுக்கும் இடத்துக்குப் போகும் வழியை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் யாரும் விமானத்துக்குப் போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்றும் விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததால், செய்வதறியாமல் திக்குமுக்காடியது விமான நிலைய நிர்வாகம்.
சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஹாங் காங் நகரத்துக்கென்று சில தனிப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. அதில் கைவைக்கும் வகையில் ஹாங் காங்கிலிருந்து சீனாவுக்கு நகரவாசிகளை நாடு கடத்துவதற்கு ஏதுவான ஒரு மசோதா முன்வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.