குறுக்கும் நெடுக்குமாக ஓடும் வாகனங்களும், ஓயாமல் ஒலிக்கும் அந்த வாகனங்களின் ‘ஹாரன்' சத்தமும் காதுகளை துளைக்க மறக்காது.
மும்பை மாநகர், இந்திய நகரங்களில் கூட்ட நெரிசல்களின் தந்தை என்றால் அது மிகையல்ல. குறுக்கும் நெடுக்குமாக ஓடும் வாகனங்களும், ஓயாமல் ஒலிக்கும் அந்த வாகனங்களின் ‘ஹாரன்' சத்தமும் காதுகளை துளைக்க மறக்காது. குறிப்பாக சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள், பச்சை நிற சிக்னல் விழுவதற்கு முன்பே ஓயாமல் ஒலி எழுப்புவது வாடிக்கையாகிவிட்டது.
அனுதினம் நடக்கும் இந்த ஒலி மாசுபாட்டைத் தடுக்க, மும்பை போலீஸார் ஒரு புதிய யுக்தியை அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்து பேசிய மும்பை நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து), மதுக்கர் பாண்டே, 'மும்பை நகர சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் பச்சை சிக்னல் விழுவதற்கு முன்பே ஒலி எழுப்பினால், அது அந்த சிக்னல் கம்பத்தில் உள்ள ஒலி அளவிடும் கருவியில் பதிவாகும். அந்த அளவு 85 டெசிபல் என்ற இலக்கை தாண்டும் போது தானாகவே சிக்னலில் காத்திருக்க வேண்டிய நேரம் மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பேசிய கமிஷனர், இந்த டெசிபல் அளக்கும் கருவி மும்பை நகரின் முக்கிய இடங்களான சத்ரபதி சிவாஜி பேருந்து நிலையம், மெரைன் டிரைவ், மற்றும் பெட்டர் சாலை போன்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்த புதிய திட்டம் குறித்த தகவலை, சில நடிகர்களை வைத்து வீடியோவாக தயாரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் மும்பை போலீசார்.
மும்பை நகரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய ஒலி மாசுபாட்டை தடுக்கும் முயற்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் ‘சுமைரா அப்துல் அலி', இந்தத் திட்டத்தை போல வேறு ஒரு திட்டத்தை தான் உலகில் எங்கும் கேள்விப்பட்டதில்லை என்று தெரிவித்தார். இதை முன்னெடுத்து நடத்தும் அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் போலீசாருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news