சென்னை: (பிடிஐ) தி.மு.க தலைவர் மு.கருணாநிதி உடல் நல குறைவால், கடந்த சனிக்கிழமை அன்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள நூற்றுக்கணக்கான தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வெளியே அவரின் உடல் நலம் குறித்து அறிய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவருக்கு, தொடர்ந்து மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவமனைக்கு வெளியே, வட்டங்கள் அமைத்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகைப்படங்களை ஏந்தியபடி “எழுந்து வா தலைவா!” என்று தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி வருகின்றனர்.
நேற்று திடீரென்று உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதால், தொண்டர்கள் கலங்கினார்கள். “நேற்று தலைவரின் உடல்நலத்தில் பின்னைடைவு ஏற்பட்டது, ஆனாலும் அவர் போராடி முன்னேறி வந்தார். இந்த வயசிலும் அவருக்கு உள்ள மன வலிமையால் மருத்துவ அதிசயம் நடைப்பெற்றுள்ளது” என்று தி.மு.க தொண்டர் பாலா தெரிவித்துள்ளார்
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் சீராகும் என்ற நம்பிக்கையுடன் சிலரும், பதற்றத்தில் சிலரும் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கின்றனர். திருநெல்வேலியில் இருந்து வந்திருக்கும் 84 வயது செல்லமா என்பவர், கருணாநிதிக்கு உடல் நலம் சீராக வேண்டி பிரார்த்தனை செய்து வரும் காட்சிகளை மருத்துவமனைக்கு வெளியே காண முடிகிறது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதியின் உடல் நலம் முன்னேற வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.
காவேரி மருத்துவமனை அமைந்திருக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களால் நிரம்பி உள்ளது. மேம்பாலம் வழியே மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள், மக்கள் காத்திருப்பதை பார்த்து செல்கின்றனர்.
திமுக கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இடையூறு அளிக்காமல் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை அடுத்து, தி.மு.க கட்சியின் கறுப்பு-சிவப்பு நிறத்திலான உடைகளை அணிந்த கட்சி பணியாளர்கள், கூட்டம் கலைந்து செல்ல தேவையான நடவடிக்கைகளை காவல் துறையினருடன் சேர்ந்து செய்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வெளியே உள்ள கூட்டத்தை கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)