வொர்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆதித்யா தாக்கரே
Mumbai (Maharashtra): மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 13 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஆதித்யா தாக்கரேவுக்கு நெருங்கியவரும், சிவசேனாவின் இளைஞர் பிரிவு அமைப்பான யுவசேனாவின் முக்கிய குழு உறுப்பினருமான ராகுல் கனல், 'மும்பை சிவாஜி பூங்காவில் ஆதித்யா தாக்கரே முதல்வராக உறுதிமொழி ஏற்பார்' என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் கனல் தனது ட்வீட்டர் பதிவில், எங்களின் வழிகாட்டும் ஒளி எந்த இடத்தில், எங்கள் அனைவருக்கும் அவருடைய ஆசீர்வாதம் ஒன்றை மற்றும் கொடுத்து எங்களை விட்டுச்சென்றதோ, அதே இடத்தில் இந்த வார்த்தைகளை கேட்கவும், மீண்டும் அந்த காட்சிகளை காணவும் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த பதிவுடன் ஜூனியர் தாக்கரே தனது சிறு வயதில் தாத்தா பாலாசாகேப் தாக்கரேவின் கையில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு அடுத்து, மாரத்தியில் எழுதப்பட்ட வாசகத்தில், பாலாசாகேப்பின் பேரனாகிய நான் உறுதிமொழி அளிக்கிறேன்.. என்ற குரல் சிவாஜி பூங்காவில் ஒருநாள் ஒலிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
சிவசேனாவின் வரலாற்றில் தாக்கரே குடும்பத்தில் இருந்து ஆதித்யா தாக்கரேவே (29) முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். மும்பையின் வொர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்யா தாக்கரே, எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுரேஷ் மானேவை விட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அப்போதிலிருந்தே, அடுத்த முதல்வர் ஆதித்யா தாக்கரே தான் என்ற போஸ்டர்கள் பரவலாக காணப்பட்டு வந்தது.
மகாராஷ்டிராவில் கடந்த அக்.24ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 50:50 அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் சிவசேனா உறுதியாக இருந்த வருவதால், தற்போது வரை அங்கு ஆட்சி அமையாமல் இழுபறி நீடித்து வருகிறது. 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது.
தொடர்ந்து, தனது முடிவில் இருந்து சிவசேனாவும் பின்வாங்க மறுத்து வருகிறது. மேலும், 2014ல் பாஜகவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்தோம், இந்த முறை அவ்வாறு இருக்க முடியாது என்று சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.