இது குறித்த வீடியோவை ஓட் டனாக், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கார் பந்தயத்தில் விபத்துகள் நடப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு மலையிலிருந்து கார் கீழே விழுவதும், அது குறித்தான முழு வீடியோவும் வெளியாவுதும், பார்ப்போரைப் பதைபதைக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில், கார் பந்தயத்தில் உலக சாம்பியனான ஓட் டனாக் மற்றும் அவரது கோ-டிரைவர் பந்தயக் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். மான்டி கார்லோ பந்தயத்தில் இருவரும் தங்களது ஹியுண்டாய் காரில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று கார் தடம் மாறி சாலையை விட்டு விலகுகிறது. கீழே பள்ளத்தாக்கு…
சாலையை விட்டு வெளியே சென்ற கார், மரத்தில் முட்டி, மலை உச்சியிலிருந்து கீழே உருண்டு செல்கிறது. வாகனத்துடனேயே பொறுத்தப்பட்டிருந்த கேமரா மூலம் விபத்தின் முழுக் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இறுதியில் வாகனத்திற்குள் இருந்த இருவரும் பெரிய காயங்களின்றி பத்திரமாக வெளியே வருகின்றனர்.
இது குறித்த வீடியோவை ஓட் டனாக், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோவுடன் அவர், “இன்று காலை நடந்தது இதுதான். ஆனால், நாங்கள் குணமடைந்து வருகிறோம். சீக்கிரம் ஃபிட்டாக இருப்போம்,” என்று நம்பிக்கைத் ததும்ப பதிவிட்டுள்ளார்.
இதுவரை இந்த பதறவைக்கும் வீடியோ, 4.7 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் வீடியோவுக்குக் கீழ் ஷாக் கமென்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
டனாக்-ன் குழு, “விபத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் ஓட் டனாக் மற்றும் மார்டின் ஜர்வேஜா நலமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளது.
32 வயதாகும் ஓட், இதுவரை மான்டி கார்லோ பந்தயத்தை மட்டும் வென்றதே இல்லை. விபத்தானபோது பந்தயத்தில் அவர் 4வது இடத்தில் இருந்தார்.
Click for more
trending news