கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்விலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை நலிவுற்றதால், பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்தம் குறைவு காரணமாக இன்று காலை 1:30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை தற்போது தேறியுள்ளது. தொடர்ந்து மருத்துவக் குழு கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணாநிதி இம்மாதம் 18-ம் தேதி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியஸ்டமி கருவி நீக்கப்பட்டு பதிய கருவி பொருத்தப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே வீடு திரும்பினார்.
மீண்டும், சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், ‘சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என திமுக-வின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
பல்வேறு பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கோபாலபுரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.