This Article is From Aug 30, 2018

‘செயற்பாட்டளர்களுக்கு செப்டம்பர் 6 வரை வீட்டுக் காவல்!’- உச்ச நீதிமன்றம் உத்தரவு

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று 5 செயற்பாட்டளர்களை கைது செய்தது

New Delhi:

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று 5 செயற்பாட்டளர்களை கைது செய்தது. இந்நிலையில் வரும் 5 ஆம் தேதிக்குள், கைதுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 5 செயற்பாட்டளர்களும் வரும் 6 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் ஆகியோர்தான் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்

இது குறித்த முக்கிய தகவல்கள்:

  1. பீமா- கொரேகன் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு செயற்பாட்டளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இந்திய குடிமக்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையை கேள்விக்குள்ளாக்குவதற்கே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. ‘மாற்றுக் கருத்து தான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் கருவி. அந்தக் கருவி இல்லாவிட்டால் ஜனநாயகம் கேள்விக்குறியாகும்’ என்று வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூத் கருத்து தெரிவித்துள்ளார்.
  3. செயற்பாட்டளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் மூலம், கைது வாரன்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். மேலும் கைதிகள் பிணையில் வெளியே வர முடியாது. போலீஸ் தரப்பும் 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எடுத்துக் கொள்ளலாம்.
  4. அருண் ஃபெரேரா, வெர்னன் கோன்சால்வேஸ் மற்றும் வரவர ராவ் ஆகியோர் புனேவில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கோன்சால்வேஸ், ‘இது சித்தரிக்கப்பட்டுள்ள வழக்கு’ என்று பத்திரிகைகளிடம் கருத்து கூறியுள்ளார்.
  5. கடந்த ஜூன் மாதம் சுதிர் தவாலே, சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவத், ரோனா வில்சன், ஷோமா சென் ஆகியோர் பீமா- கொரேகன் வன்முறையைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இந்த ஐவருக்கு தொடர்பு இருப்பதாக கருதி இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  6. புனே காவல் துறையின் கூடுதல் கமிஷனர், ‘செயற்பாட்டளர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது இந்த கைது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. மாவோயிசம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
  7. வரும் வியாழக்கிழமை வரை வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் வீட்டுக் காவலில் வைதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவை புனே போலீஸ் ஏற்க மறுப்பதாக சுதா பரத்வாஜின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
  8. ‘இந்த நாட்டில் ஒரேயொரு என்ஜிஓ-வுக்கு மட்டும்தான் அனுமதியுண்டு. அதன் பெயர் ஆர்.எஸ்.எஸ். மற்ற அனைத்து என்ஜிஓ-க்களையும் தடை செய்து விடுங்கள். அனைத்து செயற்பாட்டளர்களையும் கைது செய்து விடுங்கள். மீறி கேள்வி கேட்பவர்களை சுட்டுத் தள்ளுங்கள். புதிய இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்’ என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
  9. ‘மன்மோகன் சிங், பிரதமராக இருந்த போது மோவோயிஸ்ட்கள் தான் இந்திய உள் நாட்டுப் பாதுகாப்புக்கு முதல் எதிரி என்று கூறியுள்ளார். தற்போது அந்தக் கட்சியின் தலைவர் ராகுல், மாவோயிஸ்ட்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கிறார். தேசிய பாதுகாப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்’ என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார்.
  10. ‘பட்டப்பகலில் கொலை செய்பவர்கள், குழு வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்படாமல்; வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமைப் போராளிகள், அறிவுஜீவிகள் ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுவது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. கொலைகள் கொண்டாடவும் கௌரவிக்கவும் படுகின்றன. இந்துப் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராகவோ நியாயம் கேட்டோ பேசுவோர் அனைவரும் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்’ என்று இதுபற்றி அருந்ததி ராய் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
  11. வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளேன் என்கிற அடிப்படையில் சொல்கிறேன், இன்று மட்டும் காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவர் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழக்கறிஞராக மாறியிருப்பார். மோடி அரசு, அவரை இன்னும் கைது செய்யாமல் விட்டிருக்கும் என்பதன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன்’ என்றுள்ளார்.

.